Thursday, April 2, 2015

திருக்கழுக்குன்றம் தல வரலாறு.

திருக்கழுக்குன்றம்' என்ற பெயர் வருவதற்கு பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்கள் உள்ளது. குறிப்பாக உலக ஆன்மிக வரலாற்றில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக் கோயில் இருப்பது தனிச்சிறப்பாகும். கலியுக தோற்றம் முதல் வேத வெட்பினியிடத்து பூடா, விருத்தா என்கிற இரு முனிவர்கள் நெடுங்காலம் தவம் செய்தார்கள். இந்த இரு முனிவர்களும் அரிய தவம் செய்த அளவில் சிவபெருமான் நேரில் தோன்றி உங்களுக்கு நம்முடைய திருமேனி அருள் செய்தோம். ஒரு கற்ப காலம் அந்த பதவியில் இருந்தால் பிறகு உங்களுக்கு முக்தியை அளிக்கிறோம் என்று சிவபெருமான் அருளினார். ஆனால் பூடா, விருத்தா என்ற 2 முனிவர்கள் அது வரைக்கும் ஐம்பொறிகள் நன்மார்க்கத்தில் இருப்பதை யார் கண்டார்கள்? எனவே எங்களுக்கு முக்தி பேற்றினை உடனே அளித்தருள வேண்டும் என்றார்கள்.

உடனே சிவபெருமான் நான் எனது திருமேனியோடு நேரில் தோன்றி உரைத்த ஏவலையும் ஏற்றக்கொள்ளாமல் நிராகரித்து விட்டீர்கள். அதனால் நீங்கள் இருவரும் கழுகு உருவமாக பிறந்து கடல் சூழ்ந்த உலகில் திரியுங்கள் என்று சிவபெருமான் சாபமிட்டார். இரு முனிவரும் பயந்து போய் உங்கள் வார்த்தையை மதிக்காமல் போனதுக்கு பொறுத்தருள வேண்டும் என்று மன்றாடினர். அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் காசிப முனிவர் இடத்தில் கழுகுகளாக பிறந்து உங்களுடைய மூக்குகளால், இந்த மலையினை கீறினால் அதில் ஆகாய கங்கை அலைவீச உண்டாகும். அந்த தீர்த்தத்தில் மூழ்கி தினமும் விருப்பத்துடன் எம்மை பூஜை செய்யுங்கள், அவ்வாறு பூஜித்து வந்தால் கலியுக முடிவில் கழுகு உருவத்தில் இருந்து விமோட்சனம் கிடைக்கும் என்று திருவாய்மலர்ந்து அருளினார். 

அவ்வாறு அருளியுடன் இவ்விருவரும் காசிப முனிவரிடத்தில் சென்று சம்பு, ஆதி என்னும் பெயருடன் இரு கழுகுகளாக பிறந்து திருக்கழுக்குன்றம் வேதகிரீயில் தங்களின் மூக்குகளால் கீறினர். உடனே அங்கு ஒரு தடாகம்(குளம்) உண்டாகியது. அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனை பூஜித்தனர். தினமும் மதிய வேளையில் மலை உச்சியில் வைக்கப்படும் உணவை அருந்தி கழுகுகள் முறையே பூஜித்துக்கொண்டு வந்ததால் இந்த ஊருக்கு திரு+ கழுகு+ குன்றம் = திருக்கழுக்குன்றம் என்னும் பெயர் உண்டாகியது என்ற வரலாற்று சிறப்புகள் உண்டு. குரு கன்னி ராசியில் பிரேவேசிக்கும் நாளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்த புஸ்கர மேள விழா முறையே நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment